ஆறுமுகநேரி குடியிருப்பு பகுதிக்கு பதிலாகவெள்ளமடை சுடுகாட்டு பகுதியில் மின்மாயனம் அமைக்க கோரிக்கை

ஆறுமுகநேரி குடியிருப்பு பகுதிக்கு பதிலாக வெள்ளமடை சுடுகாட்டு பகுதியில் மின்மாயனம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-11 18:45 GMT

ஆறுமுகநேரி மேலசண்முகபுரம் குடியிருப்பு பகுதியில் மின்மயானம் அமைக்க கூடாது என்றும், வெள்ளமடை சுடுகாட்டு பகுதியில் அமைக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனுகொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

புதூர் ஒன்றியம் சென்னம்பட்டி பஞ்சாயத்து தலைவர் அய்யாத்துரை தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சென்னம்பட்டி கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தின் முன்பு கண்மாய் இருக்கிறது. மழைக்காலத்தில் கண்மாயில் தண்ணீர் நிரம்பி விடுவதால் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடம் செல்லும் வகையில், வழியில் உள்ள கண்மாயை சுற்றிலும் தடுப்புவேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.

நடவடிக்கை

மேலஆத்தூர் புரட்சியாளர் அம்பேத்கர் சமூகநீதி சமுதாய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டராசா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து யூனியன் கருங்கடல் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அரசு பணத்தை முறைகேடாக செலவு செய்து வருகிறார். இதுதொடர்பாக தனி அதிகாரியை நியமனம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும், பஞ்சாயத்து பணிகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்த செலவு தொகைகளையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மின்மயானம் விவகாரம்

ஆறுமுகநேரி செல்வராஜபுரம், மேலசண்முகபுரம், ரெயில்வே காலனி, கணேசபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆறுமுகநேரி 2-வது வார்டு மேலசண்முகபுரம் குடியிருப்பு பகுதிக்குள் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஆகையால் மின்மயானத்தை மக்கள் குடியிருப்பு இல்லாத வெள்ளமடை சுடுகாட்டு பகுதியில் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

பழையகாயல் மூசா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியினர் தலைவர் அப்துல் நிஸ்தார் தலைமையில் முஸ்லிம்கள் கொடுத்த மனுவில், பழையகாயல் கிராமத்தில் தனிநபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஆகையால் கலெக்டர் இந்த பிரச்சினை தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்