மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி
நீடாமங்கலத்தில் மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நீடாமங்கலம் கடைவீதி பெரியார் சிலை பகுதியில் சாலையின் குறுக்கே குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று முன்தினம் இரவு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் தோண்டும் பணிக்காக நீடாமங்கலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை பொக்லின் எந்திரம் கொண்டு இரண்டு குழாய்கள் பதிக்கப்பட்டு, சாலை சமன் செய்யப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் நேரடி போக்குவரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இந்த பணியானது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் முன்னிலையில் நடந்தது. பாதுகாப்பு பணியை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.
---