ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு; கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

'ஷவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி பலியான சம்பவம் எதிரொலியாக ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-19 21:00 GMT

'ஷவர்மா' சாப்பிட்ட நாமக்கல் மாணவி பலியான சம்பவம் எதிரொலியாக ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ஓட்டல்களில் ஆய்வு

நாமக்கல்லை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவி கலையரசி, 'ஷவர்மா' சாப்பிட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் 'ஷவர்மா' தயாரித்து விற்கப்படும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணக்குமார், மஞ்சுளா, செல்வன் மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் செயல்படும் 12 ஓட்டல்களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த ஓட்டல்களில் 'ஷவர்மா' உணவுக்காக பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி முறையாக பதப்படுத்தப்படுகிறதா?, அந்த உணவுடன் வழங்கப்படும் மயோனஸ் தயாரிக்கும் முறை மற்றும் அதனை பதப்படுத்தும் முறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பின்னர் ஓட்டல்களின் சமையல் அறைக்கு சென்ற அதிகாரிகள், கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று சோதனையிட்டனர். அதில் 4 கடைகளில் 17 கிலோ கெட்டுப்போன இறைச்சி குளிர்பதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ரவுண்டு ரோட்டில் உள்ள 12 ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 4 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓட்டல்களில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

ரூ.15 ஆயிரம் அபராதம்

இதேபோல் பழனி நகரில் செயல்பட்டு வரும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்லத்துரை (பழனி), மோகனரங்கம் (ஒட்டன்சத்திரம்), சரவணன் (பழனி வட்டாரம்) ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

அப்போது பழனியில் செயல்பட்டு வரும் 22 அசைவ ஓட்டல்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது 5 ஓட்டல்களில் 17 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 5 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கியதுடன், ஒவ்வொரு ஓட்டலுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். அதனை மீறி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ஓட்டல், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்