வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
சேரங்கோடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
பந்தலூர்,
சேரங்கோடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
பள்ளியில் ஆய்வு
பந்தலூர் அருகே எருமாடு அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலையில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியின் தரத்தை நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சியை ஆய்வு மேற்கொண்டார். காலை உணவு முறையாக வழங்கப்படுகிறதா, எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைதொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள தாளூர் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார். கையுன்னி அருகே உழுவாடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கல் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவ மையத்தை ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.
வளர்ச்சி பணிகள்
இதையடுத்து சேரம்பாடி அருகே சுங்கம் முதல் சப்பந்தோடு வரை ரூ.80 லட்சம் மதிப்பில் புதியதாக போடப்பட்ட சிமெண்டு சாலை உள்பட சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் சாலை, நடைப்பாதைகள், தொகுப்பு வீடுகள் உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகளை தரமாக செய்து முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுச்சாமி, கூடலூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முகமது குதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் நடேசன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் லோகேஸ், ராக்கேஸ் மற்றும் சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.