திருப்பரங்குன்றம்-நெல்லை இடையே 2-வது அகலப்பாதையில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு
திருப்பரங்குன்றம்-நெல்லை இடையே 2-வது அகலப்பாதையில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார்.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம்-நெல்லை இடையேயான புதிய இரட்டை அகலப்பாதையில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாடு முழுவதும் இந்திய ரெயில்வேயில் பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் நடந்து வரும் ரெயில் நிலையம் மேம்பாட்டுப்பணிகளை சென்ற வாரம் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, ரெயில் பாதை, ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று காலை திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தில் இருந்து புதிதாக பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ள 2-வது அகலப்பாதையில் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் தண்டவாள உறுதித்தன்மை, வளைவுகள், வேகம், பாதுகாப்பு, சிக்னல் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, கோட்ட மேலாளர் அனந்த் மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே கட்டுமானப்பிரிவு துணைத்தலைமை என்ஜினீயர் நந்தகோபால், மதுரை கோட்ட முதுநிலை என்ஜினீயர் (தெற்கு) பிரவீனா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்த குழுவினர் கோவில்பட்டி-கடம்பூர் இடையே உள்ள குமாரபுரம் சுரங்கப்பாதை, நெல்லை ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.