கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 16 டன் நெல், 260 கிலோ காய்கறி விதைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கரீப் பருவத்திற்கு ஏற்ற நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகைகள், பருத்தி வகைகள் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் கடந்த 13-ந் தேதி மற்றும் நேற்று என 2 நாட்கள் 48 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்கு பின்னர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கூறியதாவது:-
சரிபார்ப்பு
இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்திற்கும் உண்மை நிலை சான்று அட்டை விவரம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், முளைப்பு விவரம், புறத்தூய்மை, நிகர எடை, பருவம், முளைப்பு பரிசோதனை விவரங்கள், கொள்முதல் பட்டியல், விற்பனை ரசீதுகள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. அதில் முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் பதிவு சான்று சமர்பிக்காத, இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்காத விவசாயிகள் மற்றும் உரிய பில் வழங்காத விதை விற்பனை நிலையங்களில் 22 குவியல்களில் 16 டன் நெல் மற்றும் 260 கிலோ காய்கறி விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 15.20 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் 96 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி கண்ணன், தர்மபுரி கார்த்திக், ஓசூர் குமரேசன், அரூர் சிங்காரவேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.