சேலத்தில்தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு

Update: 2023-05-26 20:06 GMT

சேலம்

சேலத்தில் உள்ள கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் முத்திரையில்லாத 17 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம், இளையராஜா, ரமணி, முத்திரை ஆய்வாளர்கள் வாசுகி, சந்திரன் மற்றும் போலீசார் நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 17 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசு முத்திரை மற்றும் மறுமுத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 27 இரும்பு எடை கற்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம்

இதுகுறித்து சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இதுவரை 30 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 16 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் 28 கடைகளில் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட போது 10 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதுதவிர சினிமா தியேட்டர்கள், சுற்றுலா வழிபாட்டு தலங்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 16 நிறுவனங்களில் 2 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரையிடப்படாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரையிடாமல் இருந்தால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்