தர்மபுரியில் 3 மையங்களில்10, பிளஸ்-2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
தர்மபுரியில் 3 மையங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு
தர்மபுரியில் 3 தேர்வு மையங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் 165 மாணவர்களும், 131 மாணவிகளும் என மொத்தம் 296 பேரும், 12-ம் வகுப்பு தேர்வில் 89 மாணவர்களும், 76 மாணவிகளும் என மொத்தம் 165 பேரும் எழுதினர்.
தர்மபுரி நடுஅள்ளியில் உள்ள கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 141 மாணவர்களும், 96 மாணவிகளும் என மொத்தம் 237 பேரும், 12-ம் வகுப்பு தேர்வில் 108 மாணவர்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 172 பேரும் எழுதினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்
தர்மபுரி எஸ்.வி ரோடு, விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 139 மாணவர்களும், 103 மாணவிகளும், ஒரு மாற்றுத்திறனாளி மாணவரும் என மொத்தம் 243 பேரும், 12-ம் வகுப்பு தேர்வில் 119 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 199 பேரும்எழுதினர்.
மொத்தத்தில் தர்மபுரியில் நடந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 776 மாணவ, மாணவிகளும் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 536 மாணவ, மாணவிகளும் எழுதினர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் தர்மபுரி கமலம் பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மாணவ, மாணவிகள் தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும். இந்த தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். தேர்வுகளில் எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது கமலம் பள்ளி தாளாளர் முத்துகுமார், துணை முதல்வர் லதா, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம் ஆகியோர்உடனிருந்தனர்.