கொடைரோடு ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

கொடைரோடு ரெயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-16 16:39 GMT

கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு மதுரை கோட்ட மேலாளர் பி.ஆனந்த் இன்று வந்தார். அப்போது அவர் ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலைய அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்கு கொடைரோடு ரெயில் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, கட்டிடங்கள் பழுது ஏற்பட்டு இருக்கிறதா என்று பார்வையிட்டார். அப்போது சில கட்டிட சுவர்கள் சேதமடைந்து காணப்பட்டன.

அதேபோல் கட்டிட மேல்பகுதியில் மரம், செடிகொடிகள் வளர்ந்திருந்ததை பார்த்தார். மேலும் ஓய்வு அறை, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்கள், படுக்கை வசதி கொண்ட ஓய்வு அறை, ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இவை அனைத்தையும் அவர் தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் ரெயில் நிலையத்துக்கு வந்த கார் டிரைவர்கள், கோட்ட மேலாளர் ஆனந்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது கொடைரோடு ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. எனவே முன்பு இருந்தபடி அனைத்து ரெயில்களும் கொடைரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரி அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்