உள்நோயாளிகள் பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும்

உள்நோயாளிகள் பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும்

Update: 2023-04-08 18:45 GMT

நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளிகள் பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும் என ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டி

வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ். மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்த பின்னரும் வேதாரண்யம் ஒன்றியம் வடுவாஞ்சேரி ஊராட்சியில் கடந்த ஆட்சியின் போது 400 ஏக்கர் நிலப்பரப்பில் உணவு பூங்கா அமைக்க ஆயிரம் கோடி அறிவக்கப்பட்டது. மேலும் நிலம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை அமல்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முதல் உணவு பூங்கா என்ற சிறப்பை வேதாரண்யம் பெறும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நாகை மருத்துவக்கல்லூரியில் தற்போது மாணவர்கள் மருத்துவ படிப்பை 2-ம் ஆண்டு படிக்க உள்ளார்கள்.

உள்நோயாளிகள் பிரிவை தொடங்க வேண்டும்

எனவே மாணவ- மாணவிகளின் நலன்கருதி நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரியில் நோயாளிகளின் சிறப்பு பிரிவு-உள்நோயாளிகள் பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்பட தொகுதி பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் பேசியுள்ளனே்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனு

வேதாரண்யம் சட்டமன்ற அலுவலகத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வை நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படிக்கு இணையான தொகையினை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டசபை கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்