கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி சாவு

Update: 2023-06-18 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் கொள்ளை

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வெட்டுமடையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குளச்சல்-மண்டைக்காடு இடையே மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலாயுதன் (வயது 61) உள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் அதிகாலையில் கோவிலுக்கு வந்த அவர் அங்கு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோவிலில் 3 குத்துவிளக்குகள் திருடப்பட்டிருந்தன. மேலும் கோவிலை ஒட்டியபடி உள்ள கல்லால் ஆன உண்டியலை கொள்ளையர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாததால் தப்பியதையும் பூசாரி உணர்ந்தார்.

உயிருக்கு போராடிய தொழிலாளி

உடனே அவர் கொள்ளை சம்பவத்தை ஊர் பிரமுகர்களுக்கு தெரிவிக்க பதற்றத்துடன் சென்றார். அந்த சமயத்தில் கோவிலின் அருகில் உள்ள பெட்டிக்கடை முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கணேசன் (55) என்பவர் முகத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ரத்தக்கறையுடன் மரக்கட்டையும் கிடந்தது. இந்த காட்சியை பார்த்த அவர் திகைத்து போனார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் தாக்கியது அம்பலம்

நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குத்துவிளக்குகளை திருடி தப்ப முயன்றுள்ளனர். இதனை பார்த்த கணேசன் சத்தம் போட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை கொடூரமாக தாக்கி விட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. அதே சமயத்தில் படுகாயமடைந்த நிலையில் தொழிலாளி பல மணி நேரம் உயிருக்காக போராடியபடி கிடந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கணேசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து போலீசார் கொலை, கொள்ளை வழக்காக மாற்றினர்.

2 தனிப்படை அமைப்பு

மேலும் கொலை, கொள்ளையில் துப்பு துலக்கி கொள்ளையர்களை பிடிக்க குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் மரக்கட்டையால் தாக்கி தொழிலாளியை கொன்ற சம்பவம் குமரியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்