ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையம்-காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-07-13 18:45 GMT

ஓசூர்:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து, தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் சரயு கூறியதாவது:-

இந்த கட்டிடம், 10,569 சதுரஅடி பரப்பளவிலான தரைத்தளத்தில் 9 எந்திரங்களுடன் கூடிய தொழித்தடம், அலுவலர்கள் அறை, 4 வகுப்பறைகள், ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில் நுட்ப மையத்தில் நவீன தொழிற்பிரிவுகள், உயர்தர தொழிற்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த பயிற்சி மையத்தில் மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற 23 குறுகிய கால நவீன பயிற்சிகள் போன்றவையும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் அனைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயனடைவார்கள். இப்பயிற்சி காலத்தின்போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். இதைத்தவிர விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிக்கணினி, சீருடை, சைக்கிள், பஸ் பயண அட்டை மற்றும் விலையில்லா ஷூ ஆகியவை வழங்கப்படும். அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 கூடுதலாக உதவித்தொகை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜகோபாலன், தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜெகநாதன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்