மோசடி நிதி நிறுவனத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மோசடி நிதி நிறுவனத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-14 18:45 GMT

மோசடி நிதி நிறுவனத்திற்கு எதிராக பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில போராட்டக்குழு தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிதி மோசடி செய்த ஸ்காட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகளை கைது செய்து, பாதிக்கப்பட்டோர் இழந்த பணத்தை மீட்டு தரவும், இதுபோன்ற மோசடி நிறுவனங்களை கண்டறிந்து தடை செய்யக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியினர், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த சாலையில் சாமியானா பந்தல் அமைத்திருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாமியானா பந்தலை அகற்ற கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்