உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Update: 2022-08-18 12:55 GMT

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

பட்டமளிப்பு விழா

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு 62 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், 215 பேருக்கு முனைவர் பட்டங்கள் உள்பட 8,168 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதன் அடையாளமாக 10 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வி.ஐ.டி. கல்வி நிறுவனம் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்வி நிறுவனம் பல வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளது. இங்கு படித்த உங்களின் கனவுகள் மெய்படும். கடினமாக உழைத்தால் வேந்தர் விசுவநாதன் போல நீங்களும் வாழ்க்கையில் உயரலாம். இந்தியாவில் முதல் 5 இடத்தில் வி.ஐ.டி. கல்வி நிறுவனம் இருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல சர்வதேச அளவிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குனராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-அமெரிக்கா நட்புறவு

இந்தியா- அமெரிக்க நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது. 2 நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியம்.

மாணவர்கள் வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. தோல்விகளை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நீங்கள் எளிமையாகவும், நன்றி உள்ளவர்களாகவும், மனிதநேயத்துடன் திகழ வேண்டும். உங்களுக்கு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். இது உங்கள் வாழ்க்கையின் தொடக்கம். புதிய சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை கொண்டு வரும் வகையில் சிந்தியுங்கள்.

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா 100-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது நாட்டின் வளர்ச்சிக்கு உங்களுடைய பங்களிப்பு அதிகம் தேவையானதாக இருக்கும்.

80 ஆயிரம் தொழில் நிறுவனங்கள்

இந்தியாவில் புதிய சிந்தனை உள்ள தொழில் நிறுவனங்கள் 400 இருந்தன. அது தற்போது 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 750 பள்ளி மாணவர்கள் இணைந்து 75 செயற்கைக் கோள்களை உருவாக்கி உள்ளனர். இது எல்லாம் நம் நாட்டில் தான் நடக்கிறது.

பள்ளி அளவிலேயே மாணவர்கள் புதிய சிந்தனைகளை கொண்டுள்ளனர். வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பது உங்களுடைய கையில் உள்ளது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்.

இந்தியா 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பின் போது இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கியது.

இவ்வாறு அவர் பேசினார்.

கவுரவ டாக்டர் பட்டம்

கவுரவ விருந்தினராக அமெரிக்க நாட்டின் துணை தூதர் ஜூடித்ராவின் கலந்து கொண்டு பேசினார்.

அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்திய அளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் முதல் 200 இடங்களுக்குள் வர வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உள்ளோம். ஏழை மக்கள் உயர்கல்வி கற்பதில் சிரமம் உள்ளது. அனைத்து நாடுகளும் உயர்கல்வியில் கவனம் செலுத்துகின்றன.

30 நாடுகளில் உயர்கல்வி இலவசம்

30 நாடுகளில் உயர்கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. அதுபோல இந்தியாவிலும் அனைவருக்கும் உயர்கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். எந்த மாநிலம் உயர்கல்விக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்கிறதோ அந்த மாநிலம் வளர்ச்சி அடைகிறது. கல்விக்கு அதிகமாக செலவழித்தால் தான் நாம் முன்னேற முடியும். அரசியல் கட்சியினர் இலவசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி சங்கர் விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதியவருக்கு முனைவர் பட்டம்

நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த 75 வயதான வெங்டேசன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்