சுயேச்சை கவுன்சிலர் தர்ணா
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டததை புறக்கணித்து சுயேச்சை கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம், தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் ராமராஜபுரம் அரண்மனைகுளம் கண்மாயை சீரமைக்க, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மன்ற அனுமதி கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் கடும் விவாதம் நடந்தது.
சுயேச்சை கவுன்சிலர் காசியம்மாள், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர், அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். கூட்டம் முடிவும் வரை தர்ணாவில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.