சுதந்திர தின விழா கொண்டாட்டம்
அரியலூரில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின அமுத பெருவிழா
இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அரியலூர் அருகே உள்ள இறுவளூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர் கலைவாணி, போலீஸ் அதிகாரி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதினபரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி ஆகியோர் செய்து இருந்தனர்.
பிரம்மாண்டமான மூவர்ணக்கொடி
இதேபோல் அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்புறம் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. 14 அடி நீளமும் 10 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடியை 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கம்பத்தில் ஏற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய மேலாளர் ராஜ ராஜன் கொடி ஏற்றுவதற்கான மோட்டாரின் பட்டனை ஆன் செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், முத்துகிருஷ்ணன், மற்றும் போலீசார், ரெயில்வே ஊழியர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
ஜெயங்கொண்டத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து 75 சாலை விதிகளை கடைபிடிக்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தேசியக்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தா.பழூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் போலீசார் தேசியக்கொடிக்கு துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். போலீசார் அப்பகுதி வழியாக சென்ற பஸ்களை நிறுத்தி பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.