அதிகரிக்கும் கொரோனா... காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.;
காரைக்கால்,
நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கும் மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரைக்காலில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.