உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்

உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம் குறித்து ெபாதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-30 18:54 GMT

''கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.

அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிக லாபம்

கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.

இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.

உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-

செயற்கை நிறமி

கல்லூரி உதவி பேராசிரியை அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்து கிருஷ்ணசாமி:-

அனைத்து பொருட்களிலும் கலப்படம் என்பது சர்வ சாதாரணம் ஆகி விட்டது. ஒரு சில டீக்கடைகளில் டீ போடும் போது டிகாசன் சிவப்பு கலரில் உள்ளது. இதில் புளியங்கொட்டை தூள் கலக்கின்றனர். அதேபோல் தெருவில் தேன் விற்கும் வியாபாரிகள் சர்க்கரை பாகு கலந்து விற்பனை செய்கின்றனர். அதேபோல் இயற்கை பானமான பதநீரில் சில வேதிப்பொருட்களை கலந்து பதநீரை அதிகப்படுத்தி விற்பனை செய்கின்றனர். அத்தியாவசிய பொருளான பாலிலும் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக சில செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

நடுத்தர ஏழை மக்களை குறிவைத்து அதிக கலப்படம் நடக்கின்றது. கலப்படங்களை தடுக்க உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் இயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்களிலும் கூட ஒரு சிலர் ரசாயனங்களை ேசர்க்கின்றனர். கலப்பட பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

முன்னாள் அரசு வக்கீலும், சீனியர் வக்கீலுமான ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜம்மாள்:- உணவு பொருட்களில் கலப்படம் செய்வது கடுமையான குற்றமாகும். இந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை நீதிமன்றம் விதிக்கிறது. இருந்தாலும் தமிழக அரசு உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்து சோதனை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி ஒன்றியம், மாவட்ட, மாநில அளவில் உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை கொண்டு நடவடிக்கைகள் எடுத்தாலும் தமிழக அளவில் உணவு பொருட்களில் கலப்படத்தை தடுக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.

மேலும் கலப்பட பொருட்களால் நோய்கள் அதிகரிக்கும். இதை தடுக்க அரசு முன்வர வேண்டும். வியாபாரிகளும் வியாபார நோக்கோடு கலப்பட பொருட்கள் விற்பதை தவிர்க்க வேண்டும். பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மனசாட்சி

அரசுத்துறை அதிகாரி பணி ஓய்வு பெற்ற சிவகுருநாதன்:- சமீபகாலமாக உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தும் பொருட்களிலும், உணவு பொருட்கள் தயாரிப்பிலும் கலப்படம் ஆக்கிரமித்து விட்டதால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் பாஸ்ட்புட் வகைகள் பெரும்பாலும் கலப்படத்தின் அடிப்படையிலேயே உள்ளன. இவற்றை உண்பதால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்பது உண்மை. தற்போதைய நிலையில் விவசாயிகள் மட்டுமே விளை பொருள்களை கலப்படமில்லாமல் தருகிறார்கள். ஆனால் அது ஒரு சில வணிகர்கள் கையில் போகும் போது கலப்படமாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணெயில் பாமாயில் கலக்கப்படுகிறது. எண்ணெய்வித்துக்களிலும் கலப்படம் செய்யப்படுகிறது.

கலப்படத்தை தடுக்க ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் மனசாட்சியுடன் வணிகர்கள் செயல்பட்டால் தான் கலப்படத்தை தவிர்க்க முடியும். மெய் வளர்ப்பதற்காக உணவு உண்கிறோம். ஆனால் அது நோயை தருகிறது என்றால் ஏற்புடையதல்ல. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டும்

விருதுநகரை சேர்ந்த வணிகர் வெற்றி:- விவசாய விளைபொருட்கள் சந்தைக்கு வர சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால் சமீபகாலமாக பாஸ்ட்புட் கலாசாரம் அதிகரித்துவிட்ட நிலையில் உணவுப் பொருட்களிலும் அதற்கு பயன்படுத்தும் பொருட்களிலும் தரம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இது முறையாக கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும் கண்காணிப்பு முறையாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகத்தான் உள்ளது.

வணிகர்கள் பெரும்பாலும் கலப்படம் செய்வதை விரும்புவதில்லை. ஒரு சிலர் அதில் ஈடுபட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது பொது நலனுக்கு விரோதமான செயல் மட்டுமல்லாது சமுதாயத்திற்கும் விரோதமான செயலாகும். அது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

புகார் தெரிவிக்க செல்போன் எண்

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ்:-

பொதுவாக உணவுப்பொருட்களில் நிறமிகள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அதிலும் தற்போது பாஸ்ட்புட் கலாசாரம் பெருகி விட்டநிலையில் அவற்றை உண்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்டத்தில் தொடர் சோதனைகள் நடத்தி தற்போது நிறமிகள் சேர்க்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதை தவிர்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக கலர் வடகம், கலர் வத்தல் போன்ற பொருட்கள் தயாரிப்பது தவிர்க்கப்பட்டு விட்டது. பொதுமக்கள் கலப்படம் தொடர்பாக எங்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தகவல் தலைமை அலுவலகத்திற்கு சென்று எங்களுக்கு தெரிவிக்கப்படும். நாங்கள் அது குறித்து உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மல்லி, பருப்பு, சமையல்எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளில் அவ்வப்போது மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. அதில் கலப்படம் இருந்தால் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த மாவட்டத்தை பொருத்தமட்டில் கலப்படம் என்பது வெகுவாக தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார்கள் தரும் நிலையில் அது தொடர்பாக ஆய்வு செய்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் சிவில் வழக்குகளாக இருந்தால் மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு விசாரணை நடத்தப்பட்டு உரிய தண்டனை பெற்று தரப்படுகிறது. கலப்படத்தை தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பும், உதவியும் மிகவும் அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்