வங்கிகடன் வட்டி உயர்வால் அதிகரிக்கும் சுமை

4 -வது முறையாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்ததால் கடன் பெற்று வீடு, வாகனம் வாங்கியது தாங்க முடியாத பாரமாகி விட்டது என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

Update: 2022-10-01 18:45 GMT

கோவை

4 -வது முறையாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்ததால் கடன் பெற்று வீடு, வாகனம் வாங்கியது தாங்க முடியாத பாரமாகி விட்டது என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

4- வது முறையாக வட்டி அதிகரிப்பு

பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. அதாவது 0.5 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 4-ந் தேதி 4.5 சதவீதமாகவும், ஜூன் மாதம் 8-ந் தேதி 4.9 சதவீதமாகவும், ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 5.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.

நேற்று முன்தினம் 4-வது முறையாக 5.9 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 5 மாதங்களில் 1.9 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் சிக்கல்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது, அதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டியை உடனடியாக உயருகிறது.

இதனால் வங்கிகளின் கடன் பெற்றவர்கள் செலுத்தும் தவணைத்தொகை மற்றும் தவணை காலம் அதிகரிக்கிறது. இதனால் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மேலும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கூறியதாவது:-

வாகன கடன்

ராஜு (கட்டுமானதொழில், சாய்பாபாகாலனி) :- புதிய இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை உள்ளது. நான் இருசக்கர வாகனத்தை வங்கிகடன் மூலம் வாங்கி உள்ளேன்.

ரூ.1½ லட்சத்துக்கு வாகன கடன் வாங்கினால் வட்டி மட்டும் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளது. தற்போது வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் சுமை ஏற்படுகிறது.

என் மகனுக்கும் கடனில் இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டு இருந்தேன். தற்போது வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதால் இருசக்கர வாகனம் வாங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.

கனவாகும் வீடு

தாமரை செல்வி (பீளமேடு) :- நான் வீட்டு கடன் வாங்கி உள்ளேன். தற்போது கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார் கள்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடு கட்ட வங்கிகள் மூலம் கடன் வாங்கி கொடுப்பதாக பிராசசிங் கட்டணம் வசூலிக்கிறார் கள். கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

இதனால் கடன் பெற்று வீடு, வாகனம் வாங்கியது தாங்க முடியாத பாரமாகி விட்டது. வட்டி விகிதம் உயர்வதால் கடன் தவணை மேலும் அதிகரிக்கும்.

வருமானம் அதிகரிக்காத நிலையில் கடனை எப்படி திருப்பி செலுத்தி முடிக்க போகிறோம் என மனஉளைச்சல் ஏற்படுகிறது. கனவு இல்லம் என்பது இனி வெறும் கனவாகவே மாறி விடும் என்ற அச்சம் உள்ளது.

மக்களை பாதிக்கும்

கணபதி (ஆலாந்துறை) :- நான் வீடு கட்டுவதற்காக ரூ.18 லட்சம் வங்கிக்கடன் வாங்கினேன். தற்போது கடன்வட்டி விகிதம் மேலும் உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையும்போது வங்கி நிர்வாகங்கள் உடனடியாக குறைப்பது இல்லை. ஆனால் வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால் உடனடியாக உயர்த்தி பணத்தை பிடித்தம் செய்து விடுகிறார்கள்.

இது குறித்து வங்கி அதிகாரிகளி டம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. இதுபோன்ற விஷயங்களில் வங்கி நிர்வாகங்களின் செயல்பாடு களை ரிசர்வ் வங்கி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். பணவீக்கம் என்ற பெயரில் 5 மாதங்களுக்குள் 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

தனிநபர் கடன்

சித்தாபுதூர் தனியார் வங்கி ஊழியர் ரவிச்சந்திரன்:- நான் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். 13 முதல் 14.5 சதவீதம் வரை தனிநபர் கடன் வட்டி விகிதம் உள்ளது.

தற்போது 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இதனால் அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். இது பொதுமக்களை மேலும் பாதிக்கும்.

வங்கி அதிகாரிகள் கூறும்போது, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டு வருகிறோம்.

வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் உயர்த்தப்படும், குறைத்தால் குறைக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்