திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மலையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-04 18:45 GMT

திருவட்டார்:

மலையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கடுமையாக உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மலையோரப் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோதையார், குற்றியார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம், திருவட்டார், திருவரம்பு போன்ற இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் 3 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. அதுபோல் நேற்றும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

திற்பரப்பு அருவி

கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில வாரங்களாக தண்ணீர் குறைவாக இருந்த நிலையில் நேற்று அதிக அளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.

மலையோர பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் அருவியில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 6, பெருஞ்சாணி அணை- 27.4, புத்தன் அணை- 28.2, சிற்றார்-1 அணை-6, சிற்றார்-2 அணை-4.8, மாம்பழத்துறையாறு அணை- 4, முக்கடல் அணை- 5.8, பூதப்பாண்டி- 3.2, கன்னிமார்- 2.2, சுருளக்கோடு- 41.4, தக்கலை- 0.3, பாலமோர்- 1.4, திற்பரப்பு- 14.4, அடையாமடை- 9 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்