ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- போக்குவரத்து நெரிசல்
ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆனைமலை
ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள்
ஆனைமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகள் இடையில் ஆழியார் அணை மற்றும் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை ,உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியார் பூங்காவில் மற்றும் அணையில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் குடும்பங்களுடன் வந்தனர். பூங்காக்கு செல்ல அனுமதிச்சிட்டு மையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் நின்று அனுமதிச்சிட்டு பெற்று சென்றனர். அழியாறு பூங்காவில் உள்ள சீசா, ஊஞ்சல், சறுக்கு, டிராகன் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். வடகிழக்கு பருவமழை போதிய அளவு கை கொடுத்ததால் 100 நாட்களுக்கும் மேலாக ஆழியாறு அணையின் கொள்ளளவு குறையாமல் நீல நிறத்தில் கடல் போல் காட்சி அளிக்கிறது.
செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
இதில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் மொபைல் போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் பூங்காவின் நுழைவுவாயில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இன்றி சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- ஆழியாறு அணையில் தடுப்புகளை மீறி ஒருசிலர் அணையில் இறங்கி செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க அணையில் கூடுதல் ஊழியர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.