கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசித்தனர்.

Update: 2023-04-24 21:00 GMT

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசனுடன் சீதோஷ்ண சூழல் நிலவுகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே தற்போது கோடைகாலம் என்பதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. கடந்த 22-ந்தேதி ரம்ஜான் விடுமுறை மற்றும் நேற்று முன்தினம் வாரவிடுமுறை என 2 நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் நேற்றும் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் வந்ததால் நகர் பகுதிகளிலும், வனப்பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்ற.ன இதையடுத்து போலீசாரும், தன்னார்வலர்களும் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

பூத்துக்குலுங்கும் பூக்கள்

இதற்கிடையே பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், குணாகுகை, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், அருவிகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்து மகிழ்ந்ததுடன், அவற்றை தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நேற்று கொடைக்கானலில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன், குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்