உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-06-14 21:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி விவசாயம்

கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கடந்த சில வாரங்களாக நீலகிரி உருளைக்கிழங்குக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் கோத்தகிரி அருகே நெடுகுளா, கட்டபெட்டு, பெட்டட்டி, பந்திமை, பனஹட்டி, பில்லிகம்பை, கக்குச்சி, உயிலட்டி போன்ற கிராம பகுதிகளில் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்முதல் விலை உயர்வு

இதுகுறித்து பெட்டட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக டிராக்டர் மூலம் நிலத்தை உழுது, உருளைக்கிழங்கு பயிரிட்டு பராமரித்து வந்தேன். போதுமான மழை பெய்ததால் தற்போது உருளைக்கிழங்கு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை கிழங்கு ரூ.2,025-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது கிலோ ரூ.45-க்கு கொள்முதல் விலை கிடைக்கிறது. இதேபோல கோத்தகிரி காய்கறி மண்டிகளில் நீலகிரி உருளைக்கிழங்கு கிலோ ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோ ரூ.35-க்கு விற்பனையான உருளைக்கிழங்கிற்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருவதால், உருளைக்கிழங்கை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக மலை காய்கறிகளின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது கேரட் கிலோவுக்கு ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.45 முதல் ரூ.50, பீன்ஸ் ரூ.100-க்கும் கொள்முதல் செய்யபடுகிறது. மலை காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைப்பதால், அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்