பூண்டு கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரி பகுதியில் பூண்டு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-07-01 21:30 GMT


கோத்தகிரி


கோத்தகிரி பகுதியில் பூண்டு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


மலைக்காய்கறிகள்


கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. நீலகிரி பூண்டுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.


இதன் காரணமாக கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நீலகிரி பூண்டை ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் அவ்வப்போது மழை பெய்ததால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. தற்போது பூண்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருவதால் அதை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


விலை உயர்வு


இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:- முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. விதைக்காக நீலகிரி பூண்டுகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூண்டு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்ததால், நிலத்தை டிராக்டர் மூலம் உழுது பதப்படுத்த முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டு, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது பூண்டு கிலோவுக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்