இன்று முதல் ரூ.4,000: திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..! முதல்-அமைச்சர் வழங்கினார்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.3,000/-லிருந்து ரூ.4,000/-மாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, ஓய்வுபெற்ற 5 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 5 பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்திற்கான காசோலைகளை வழங்கி, தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் புனரமைத்து குடமுழுக்கு நடத்துதல், திருக்குளத் திருப்பணி, திருத்தேர் திருப்பணி மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பில் "துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000/- ஆகும். இவ்வரசின் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் திருக்கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்றும், "ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500/- குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500/-லிருந்து ரூ.2000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4,000/- மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2,000/- ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன்,கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.