காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோத்தகிரி அருகே பலா பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2022-06-20 14:36 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே பலா பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பலா பழங்கள்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். சுவை மிகுந்த பலா பழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சாலையோரங்களில் பலா பழங்களை அடுக்கி வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலா மரங்களில் கொத்துக் கொத்தாக பலா பழங்கள் காய்த்து குலுங்குகிறது. இது காட்டு யானைகளுக்கு பிடித்த உணவாகும். எனவே, பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இதனால் சாலையோரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

காட்டு யானைகள்

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. பலா பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனத்தை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது.

மேலும் கிராம மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். மேலும் பலா பழ கழிவுகளை சாலையோரத்தில் வீசுவதை தவிர்ப்பதோடு, குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் குடியிருப்புக்குள் யானைகள் நுழைவதை தடுக்க முடியும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்