இலை கருகல் நோய் பரவல் அதிகரிப்பு
நெகமம் பகுதி தென்னை மரங்களில் இலை கருகல் நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் காய்ப்புத்திறன் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.
நெகமம்
நெகமம் பகுதி தென்னை மரங்களில் இலை கருகல் நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் காய்ப்புத்திறன் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.
தென்னை சாகுபடி
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பெரும்பான்மையாக தென்னையே சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தவறாமல் பெய்யும் பருவமழை மற்றும் கோடை மழையின்போது, வறட்சி காலத்தில் வாடி வதங்கிய தென்னை மரங்கள் செழிப்புடன் இருப்பதை காண முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக இலை கருகல் நோய் ஏற்பட்டு தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த தென்னை மரங்களை வெட்டி சாய்க்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சில கிராமங்களில் தென்னையில் ஏற்படும் இலை கருகல் நோயால் பெரும் பாதிப்பு நிலவுகிறது. அதிலும் குறிப்பாக செட்டியக்காபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குருநல்லிபாளையம், கப்பளாங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் பாதிப்பில் சிக்கியுள்ளது.
வேதனை
அதிலும், மழை அதிகம் பெய்யும் கிராம பகுதியில் விளைந்துள்ள தென்னை மரங்களே இலை கருகல் நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும், அதன்பின்னர் வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்திருந்தாலும், பல்வேறு கிராமங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்ட இலை கருகல் நோயை கட்டுப்படுத்த முடியாமல் விவவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கிராமங்களில் பார்க்கின்ற இடமெல்லாம் பச்சை பசேல் என தென்னை மரங்கள் செழித்தோங்கி இருந்தாலும், இலை கருகல் நோய் மட்டும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இருப்பது அப்பகுதி விவசாயிகளுக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
காய்ப்புத்திறன் நிற்கும்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒருசில மரங்களில் ஏற்படும் இலை கருகல் நோயானது, அடுத்தடுத்துள்ள மரங்களில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே நோயை முழுமையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு செல்வதை தவிர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் முன்வந்து, அதுதொடர்பாக சிறப்பு முகாம் அமைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வரும் இவ்வேளையில், இலை கருகல் நோயையும் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் தென்னையில் காய்ப்புத்திறன் நின்றுவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.