கல்விக்கு செலவழிக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும்; வி.ஐ.டி. வேந்தர் பேச்சு

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு செலவழிக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும், என வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.

Update: 2022-10-22 12:45 GMT

மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு செலவழிக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும், என வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.

ரெட்கிராஸ் ஆண்டு விழா

இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையின் 12-ம் ஆண்டு விழா காட்பாடி லட்சுமி அரங்கில் நடந்தது. சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சீனிவாசன், விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவவடிவு வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்று மாநில அரசின் விருது பெற்றவர்களுக்கும், சிறப்பாக செயலாற்றிய ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவர்களுக்கும், இலவச தையல் பயிற்சி முடித்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலகளாவிய இயக்கம்

ரெட்கிராஸ் சங்கம் என்பது உலகலாவிய இயக்கம். காட்பாடி மூன்று முறை மாநில அளவில் சிறப்பாக செயலாற்றியதற்காக ஆளுனரின் விருது பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வேலூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின் தங்கிய மாவட்டம். அரசின் உதவி கிடைத்தால் தான் படிக்க முடியும். தமிழக அரசும் பெண்கள் உயர்கல்வி பெற திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

தற்போது வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதி நிரம்பி வழிகிறது. ஒரு பெண் படித்தால் தான் குடும்பம் வளரும். அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை, வி.ஐ.டி.யுடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 6,800 பேருக்கு உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளது.

கல்விக்கு செலவழிக்கும் நிதியை...

தமிழக அரசும், மத்திய அரசும் கல்விக்கான உதவி திட்டங்கள் தொடர வேண்டும். கல்விக்கு தற்போது செலவழிக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

விழாவில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவவலு ஆகியோர் பேசினர்.

விருதுகள்

குஜராத் மாநில முதல்-அமைச்சரிடம் விருது பெற்ற வி.காந்திலால் பட்டேல், ரத்த தானம் செய்வதில் சிறப்பாக செயலாற்றி வரும் வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன், கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன் உள்பட பலருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் ருக்ஜி ராஜேஷ்குமார், ரமேஷ்குமார் ஜெயின் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் வி. பழனி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்