மதுரை கட்டுமான நிறுவனங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை

மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரரின் அலுவலகம், வீடுகளில் வருமானவரித்துறையினரின் சோதனை நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

Update: 2022-07-21 20:22 GMT

மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரரின் அலுவலகம், வீடுகளில் வருமானவரித்துறையினரின் சோதனை நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

2-வது நாளாக

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் வருமானவரித்துறை அலுவலர்கள் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அவனியாபுரம் பாலுவின் மகன்கள் அழகர், வக்கீல் முருகன், கிளாட்வே ஹவுசிங் என்ஜினீயர் ஜெயக்குமார், ஜெயபாரத் ஹவுசிங் சரவணன், அன்னை பாரத் செந்தில் குமார் அவரது தம்பி, 3 மகள்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான நகை, பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதே போல் மதுரை கே.கே.நகரில் அரசு ஒப்பந்ததாரர் முருகவேல் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர்.கட்டுமான நிறுவனத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்றும் தொடர்ந்து நடந்தது.

இன்றும் ெதாடருமா?

இந்த நிறுவனத்துக்கு கே.கே.நகர் மட்டுமின்றி கோச்சடை, விசாலாட்சிநகர், கலைநகர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இங்கும் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. இந்த நிறுவனங்களை பொறுத்தமட்டில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்த பணிகளை செய்துள்ளனர். ஆனால், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதுடன், வரி ஏய்ப்பும் செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில், கடந்த ஆட்சியின் போது மேற்கொண்ட ஒப்பந்த பணிகளுக்கான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ஆகியன சிக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருவதாகவும் தேவைப்பட்டால் இந்த சோதனையை இன்று (வெள்ளிக்கிழமை) தொடரவும் முடிவு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களாக மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் வருமானவரித்துறையினரின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பு நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்