வாசுதேவநல்லூரில் பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 போ் குத்திக்கொலை

வாசுதேவநல்லூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-18 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா பிரமுகர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55). விவசாயியான இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரட்டைக் கொலை

நேற்று மாலையில் தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அந்த சமயத்தில் அங்கு அய்யப்பனின் மகன் 17 வயதான சிறுவன் வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த சிறுவனை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கொலை செய்யப்பட்ட செல்லத்துரைக்கு ஒரு மகளும், அய்யப்பனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பரபரப்பு

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாசுதேவநல்லூரில் பா.ஜனதா பிரமுகர் உள்பட 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்