சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரியும், மணிகண்டன் கேப்பர்மலை உதவி சிறை அலுவலருக்கான குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி மணிகண்டன் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள், அவரது வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் முதுநகர் போலீசார், கடலூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி (பொறுப்பு) வனஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எண்ணூர் தனசேகரனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவரை ஒரு நாள் காவலில் எடுத்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.