சென்னையில் இடைவிடாது பெய்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் நேற்று இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-12 23:23 GMT

சென்னை,

'மாண்டஸ்' புயலின்போது சென்னையில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்து அரபிக்கடல் பக்கம் சென்றவுடன் சென்னையில் வெயில் தலை காட்டியது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிந்தது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்வதும், பின்னர் ஓய்வதுமாகவே இருந்தது. கனமழையுடன் காலை பொழுது விடிந்தது. மழைப்பொழிவுக்கு இடையே மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

வேலைக்கு சென்ற ஊழியர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். மகளிர் கட்டணமில்லா பயணம் செய்யும் மாநகர பஸ்கள் சிலவற்றில் மேற்கூரை வழியாக மழைநீர் சொட்டு, சொட்டாக பயணிகள் மீது விழுந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

மழை பெரிய அளவில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேரம் செல்ல, செல்ல வானில் கருமேகங்கள் கடுமையாக சூழ்ந்தது. இடைவிடாது மழை பெய்துக்கொண்டே இருந்தது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.

கனமழை நீடித்ததால் சென்னை மாவட்டத்தில் இயங்கும் பள்ளிக்கூடங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். அதே போன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினா.

சில பள்ளிகளில் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டன. பள்ளிக்கூடங்கள் முன்கூட்டியே விடப்பட்டதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பெற்றோர்கள் மழைக்கு இடையே பள்ளிக்கூடங்களுக்கு சென்று தங்களது பிள்ளைகளை அழைத்து வந்தனர்.

'குளுகுளு'வென மாறிய சென்னை

சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலையோர, நடைபாதை வியாபாரிகளின் வியாபாரம் பாதித்தது. அதே நேரத்தில் மழைக்கு இதமாக சூடாக பஜ்ஜி, வடை, போண்டா விற்பனை செய்த கடைகளில் விற்பனை களைகட்டியது.

அதேவேளை நகர் முழுவதும் நேற்று 'குளுகுளு'வென இருந்தது. இதனால் மின்விசிறிகள் மற்றும் ஏ.சி.களுக்கு ஓய்வு தரப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்