தொடர் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-07 10:51 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்