பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-12-25 05:01 GMT

சென்னை,

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவார்கள். 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.1,200 மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்