நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பூட்டிக்கிடந்த மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம் திறப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பூட்டிக்கிடந்த மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம் ேநற்று திறக்கப்பட்டது.

Update: 2022-10-03 21:04 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டண சுகாதார வளாகம் சரியாக திறக்கப்படுவது இல்லை. மேலும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறையும் பூட்டப்பட்டு கிடந்தது. அங்கு பொது சுகாதார வளாகமும் இல்லை. இதுதவிர கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றங்கரையை கழிப்பறை போல் பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார சுகாதார அலுவலகத்தை சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த சுகாதார வளாகத்தை உடனே திறக்க வேண்டும் என்று, கட்டண கழிப்பறையை கவனித்து வரும் செல்லத்தாய் என்பவருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. இதேபோல் கட்டண சுகாதார வளாகமும் திறக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து செல்லத்தாய் கூறுகையில், 'கட்டண கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையிலும் சில பொருட்கள் உடைந்து உள்ளன. அதையும் சரிசெய்ய வேண்டும். எனக்கு சம்பளம் முறையாக வழங்க வேண்டும்' என்றார்.

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறுகையில், 'நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகத்தை உடனே திறந்து அவர்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளேன். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கான சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த சுகாதார வளாகம் மிகவும் சுத்தமாக உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் விரைவில் பொது சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்