உதவித்தொகை சரிவர வழங்கப்படுவது இல்லை-குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார்

உதவித்தொகை சரிவர வழங்கப்படுவது இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-12-03 18:45 GMT

பொள்ளாச்சி

உதவித்தொகை சரிவர வழங்கப்படுவது இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.

சிறப்பு முகாம்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமை சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் மனுக்களை பெற்று, உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.

முகாமில் வீட்டுமனை, உதவித்தொகை, அடையாள அட்டை, கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 131 மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்டன. மேலும் 15 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது தவிர செயற்கை கால், கைகளை வழங்க அளவீடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சசிரேகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவ சான்றிதழ்

முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

எங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை சரிவர கிடைப்பதில்லை. இதனால் கடும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் அடையாள அட்டை பெறுவதற்கு மருத்துவ சான்றிதழ் வாங்க அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் டாக்டர்கள் இருப்பதில்லை. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்க தனியாக டாக்டரை நியமிக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற முகாம்களை நடத்தி அங்கேயே அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்