விளாத்திகுளம் பகுதியில் மக்காச்சோளம் விதைப்பு பணி தொடக்கம்

விளாத்திகுளம் பகுதியில் மக்காச்சோளம் விதைப்பு பணி தொடக்கம்

Update: 2023-09-14 18:45 GMT

விளாத்திகுளம் பகுதியில் புரட்டாசி ராபி பருவத்தை முன்னிட்டு நேற்று மக்காச்சோள விதைப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மக்காச்சோளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய புரட்டாசி ராபி பருவத்தை முன்னிட்டு விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்கா சோளம், வெள்ளை சோளம், பருத்தி, மிளகாய் போன்றவைகள் பயிரிட தயாராகி வருகின்றனர். கடந்தாண்டு ஆவணி மாதம் முழுவதும் மழை பெய்ததால் விவசாயிகள் நிலங்களை பல முறை உழவு செய்தனா். இதனால் பருவகாலத்தில் பயிர்களை சுற்றி களைகள் முளைக்கவில்லை. இதனால் எதிர்பார்த்த மகசூலை பெற முடிந்தது. ஆனால் நடப்பாண்டில் ஆவணியில் கோடைமழை பெய்யவில்லை. இதனால் சட்டி உழவுக்கு பின் போதிய ஈரம் இல்லாததால் பல் உழவு போட முடியவில்லை. வேறு வழியின்றி பட்டம் நெருங்குவதால் விளாத்திகுளம் பகுதியில், வறட்டு உழவு செய்து விவசாயிகள் முதல் விதைப்பாக மக்காச்சோளம் விதைக்கின்றனர். புரட்டாசி முதல் வாரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இயற்கையை வழிபட்டு இந்தாண்டு முதல் விதைப்பாக பெண் விவசாயிகள் மக்காச்சோளம் விதைகளை விதைத்தனர்.

விதைகள்

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும் போது, கடந்த காலங்களில் கூட்டுறவு கடன் சங்கங்களில் 4 கிலோ மக்காச்சோளம் விதைப்பை ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஆவணி மாதம் முடியும் நிலையில் இன்னும் மக்காச்சோளம் விதை கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை. அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் மக்காச்சோளம் விதை மற்றும் வெள்ளைச் சோளம், கம்பு, சூரியகாந்தி போன்ற விதைகள் இருப்பு வைத்து, சலுகை விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்