வேலூரில், மல்லிகை பூ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூரில், மல்லிகை பூ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பூ விலை அதிகரிப்பு
எத்தனை பூக்கள் இருந்தாலும் மல்லிகை பூவுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த பூவுக்கும் இல்லை எனலாம். பூவின் வாசமும், அதன் வசீகரமும் ஆளை மயக்கும். எந்த விழாவாக இருந்தாலும் அதில் மல்லிகை பூ முக்கிய அங்கம் வகிக்கும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூ மட்டுமல்லாமல் அனைத்து பூக்களின் தேவை அதிகமாகி உள்ளது. இதனால் வேலூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வேலூர் நேதாஜி பூ மார்க்கெட் சங்க செயலாளர் முத்துகணேசன் கூறியதாவது:-
ரூ.2 ஆயிரம் வரை...
வேலூருக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டையொட்டி பூக்களில் விலை அதிகரித்து இருந்தது. அதைத்தொடர்ந்து பொங்கல்பண்டிகையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து உள்ளது. குறிப்பாக மல்லிகை பூ கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதர பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பூக்களின் விலை வருமாறு (கிலோவுக்கு) :-.
சாமந்தி ரூ.100 முதல் ரூ.150 வரையும், ரோஜா ரூ.220 முதல் ரூ.250 வரையும், ஜாதிமல்லி ரூ.500 முதல் ரூ.1,000 வரையும், கனகாம்பரம் ரூ.800-க்கும், காக்கடைமல்லி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.