வால்பாறையில் ரேஷன் கடை, வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் ரேஷன் கடை, வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2023-01-30 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் ரேஷன் கடை, வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

3 காட்டு யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள சிங்கோனா 2-வது பிரிவு பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் ஆளில்லாமல் காலியாக இருந்த வீட்டை சேதப்படுத்தி சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடியுள்ளது. அங்கு சாப்பிட ஏதும் கிடைக்காத நிலையில் அருகில் இருந்த செல்லத்துரை என்பவரின் வீட்டின் முன் அறை முழுவதையும் உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

வனப்பகுதிக்குள் விரட்டினர்

வீட்டுக்குள் பதுங்கி கொண்டு கூச்சலிட்டு பார்த்துக் கொண்டிருந்த செல்லத்துரை அவரது மனைவி கருப்பாயி இருவரும் நீண்ட நேரமாகியும் யானைகள் போகாததால் உள்ளே நுழைந்து விடும் என்ற பயத்தில் பின் பக்க கதவை திறந்து வெளியே ஓடி அருகில் இருந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்று உயிர் தப்பியுள்ளனர். தகவலறிந்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து சைரன் ஒலிக்கச் செய்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியில் இருந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் சேதமடைந்த செல்லத்துரை வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரேஷன் கடை சேதம்

இதேபோல் நேற்று முன்தினம் அப்பர் பாரளை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அதே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் இருந்த ரேஷன் கடையை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு ரேஷன் அரிசிகளை எடுத்து சாப்பிட்டுள்ளது. சம்பவஇடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் காட்டு யானைகளை அங்கிருந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகளால் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்