தூத்துக்குடியில் தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டது
தூத்துக்குடியில் தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.;
தக்காளி
தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டுக்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்கனிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதன்படி தினமும் சுமார் 2 ஆயிரம் பெட்டி தக்காளி வந்து கொண்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறையத் தொடங்கி உள்ளது. குறிப்பாக பாவூர் சத்திரம் பகுதியில் இருந்து தக்காளி சீசன் தாமதமானதால் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் தினமும் சுமார் 600 பெட்டி தக்காளி மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.
விலை அதிகரிப்பு
இதனால் தூத்துக்குடியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து நேற்று ரூ.100-ஐ தொட்டது. மொத்த விற்பனைக்கு ரூ.80-க்கும், சில்லறை விற்பனைக்கு ரூ.100-க்கும் விற்பனையானது. இதே போன்று மிளகாய், இஞ்சி, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.