தூத்துக்குடியில் தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்

தூத்துக்குடியில் தாசில்தார் வீடு முன்பு அவரது மனைவி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-08 18:45 GMT

தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானராஜ். இவர் சிவில் சப்ளை தாசில்தாராக உள்ளார். இவருடைய மனைவி கிரேசி விஜயா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கிரேசி விஜயா தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது 2 குழந்தைகளையும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஞானராஜ் அழைத்து சென்று விட்டார். குழந்தைகளை சரிவர பராமரிக்காமல், தனது உறவினரிடம் ஒப்படைத்து பராமரித்து வருகிறார். இதனால் குழந்தைகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சேரலாதன், குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர்வது சிறந்தது. ஆகையால் 2 குழந்தைகளின் தற்காலிக பராமரிப்பு உரிமையை தாய் கிரேசி விஜயாவுக்கு வழங்கப்படுகிறது. அவரிடம் 2 குழந்தைகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கிரேசி விஜயா நேற்று மதியம் ஞானராஜ் வீட்டுக்கு சென்றார். ஆனால் முறையாக யாரும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிரேசி விஜயா கோர்ட்டு உத்தரவுப்படி தனது குழந்தைகளை ஒப்படைக்க கோரி, வீடு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

----------

Tags:    

மேலும் செய்திகள்