தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை: டீன் சிவக்குமார்
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக டீன் சிவக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக, புதிய டீன் சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
பொறுப்பேற்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வந்த டி.நேரு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை தலைவர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை சேர்ந்தவர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவ படிப்பையும், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்.டி படிப்பையும், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டய படிப்பையும் படித்துள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி உள்ளார். தற்போது திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பொறுப்பேற்றுள்ளார்.
ரூ.136 கோடி
பின்னர் டீன் சிவக்குமார் கூறும் போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறினார்.