தூத்துக்குடியில்5 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் பாதிப்பு

தூத்துக்குடியில் 5 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2023-02-26 18:45 GMT

திண்டுக்கல்லில் இருந்து தாமதமாக வந்ததால், தூத்துக்குடியில் 5 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நெல்லையில் உள்ள ஆவின் ஒன்றியத்தில் இருந்து தினமும் பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினந்தோறும் சராசரியாக 27 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. அதன்படி காலதாமதமாக பால் விநியோகம் செய்வது, பாலின் அளவு குறைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் ஆவின் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.

நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரக்கூடிய பாலில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் வரை பால் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இதில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மற்ற இடங்களிலும் மிகவும் தாமதமாக பால் வினியோகம் நடந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

நடவடிக்கை

இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து பால் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த பால் வரத்து நேற்று தாமதமானதால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் வரை பால் வினியோகம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பால் அளவு குறைவு, தாமதமாக வினியோகம் செய்வது தொடர்பாக நெல்லை ஆவின் ஒன்றியத்தில் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்