தூத்துக்குடியில்1000 மூத்த தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடியில் 1000 மூத்த தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

Update: 2023-09-04 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பொற்கிழி

தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள திருமண மகாலில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.31 கோடி

நான் தூத்துக்குடிக்கு பலமுறை வந்துள்ளேன். தற்போது உங்களின் வாழ்த்துக்களை பெறுவதற்காக வந்து இருக்கிறேன். இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ந் தேதி நடக்கிறது. அந்த மாநாட்டுக்கு கழகத்தின் மூத்த முன்னோடிகளான நீங்கள் அனைவரும் வாழ்த்த வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் வீரம் செறிந்த மாவட்டம். பல அடக்கு முறைகளை சந்தித்து, உடைத்து எறிந்த மாவட்டம். நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த மாவட்டத்துக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாலும், அந்த மாவட்ட செயலாளருக்கு வைக்கும் அன்பு கட்டளை, மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்பதுதான். இதுவரை 31 நிகழ்ச்சிகளில் பங்கேற்று மூத்த முன்னோடிகளுக்கு ரூ.31 கோடி வழங்கி உள்ளோம்.

உங்களுக்கு இந்த பணம் பெரிதல்ல. நீங்கள் கழுத்தில் போட்டு இருக்கும் கருப்பு, சிவப்பு துண்டுதான் பெருமையாக நீங்கள் நினைப்பீர்கள் என்பது தெரியும். இதே போன்று கலைஞர் அறக்கட்டளை சாரபில் மூத்த முன்னோடிகள் 8 பேருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 50 லட்சம் வழங்கி உள்ளோம். தலைமை கழகம் உங்களுக்கு உதவி செய்து வருகிறது. அதேபோன்று இளைஞர் அணி சார்பாக கடந்த 4 மாதத்தில் ரூ.50 லட்சம் வரை உதவி செய்து உள்ளோம்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படுத்த உள்ளோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். ஆனால் எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லை.

பொய் பரப்புகிறார்கள்

கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும் சனாதனம் என்ற வார்த்தைதான் கேட்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் என்னுடைய பேச்சை பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு சாமியார் எனது தலைக்கு ரூ.10 கோடி விலை பேசி உள்ளார். நான் கலைஞரின் வழியில் வந்தவன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். சனாதனம் என்றால் பெண்கள் வெளியில் செல்ல முடியாது. மேலாடை அணிவதற்கு அனுமதி கிடையாது என்பது போன்ற அடக்குமுறைகள் இருந்தன. இந்த சனாதன கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.

ஆனால் பா.ஜனதா பொய்யை பரப்புகிறார்கள். இனப்படுகொலையை தூண்டுவதாக பரப்புகிறார்கள். பல மாநிலங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் வாரிசுதான். பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசு. தொண்டர்களுக்கும், கலைஞருக்கும் மிகப்பெரிய நெருக்கம் இருந்தது. மிசா நேரத்தில் தொண்டர்கள் போலீசை ஏமாற்றி சென்று கலைஞரை சந்தித்தார்கள். இதில் இருப்பவர்கள் பெரியார், அண்ணாவை பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் பார்த்தது இல்லை. உங்களை எல்லாம் அவர்களின் மறுஉருவமாக பார்க்கிறேன். பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை நான் ஒரு பேரன், தாத்தா பாட்டிகளுக்கு செய்கிற கடமையாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ. மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் தூத்துக்குடி எஸ்.ஜோயல், இன்பா ரகு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், நாலாட்டின்புத்தூர் கிளை செயலாளர் மா.புவனேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்