தூத்துக்குடியில்விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2022-12-19 18:45 GMT

தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 நாள்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 22-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 23-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மீனவளத்துறை எச்சரிக்கை

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மன்னார் வளைகுடா கடற்பகுதி, குமரிக்கடற்பகுதி, தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் சுழற்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு  செல்லவில்லை

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் விசைப்படகை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நாட்டுப்படகுகள் நேற்று வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பின.

தூத்துக்குடியில் நேற்று வானிலையில் மாற்றம் காணப்பட்டது. பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூரல் விழுந்தது. பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை. இந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால், இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாவது மழையை கொடுக்கு என்ற எதிர்பார்ப்பில் தூத்துக்குடி மாவட்ட மக்களும், விவசாயிகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்