தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வில் சார்பு அணி பொறுப்புகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வில் சார்பு அணி பொறுப்புகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தல் முடிவுற்று மாநில நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, பாக அளவில் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. இளைஞரணி மகளிரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட அளவிலும், (நகரப் பகுதிக்கு) பாக அளவிலும் (ஊராட்சி பகுதிக்கு) நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ அணி மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் நியமிக்கப்படுவர்.
பிற அனைத்து அணிகளும் மாநகராட்சி, பகுதி, நகராட்சி, ஒன்றிய அளவில் ஒரு அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்களை கொண்டு இருக்கவேண்டும். பேரூராட்சி அளவில் ஒரு அமைப்பாளர் 3 துணை அமைப்பாளர்களை கொண்டு இருக்க வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான சார்பு அணிகளுக்கு தலைவர் ஒருவரும், துணைத்தலைவர் ஒருவரும் நியமனம் செய்யப்படவேண்டும்.
இளைஞரணி, மகளிரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மாநகர, நகர மற்றும் பகுதி கழகத்தில் வார்டு அளவிலும், ஒன்றிய கழகத்தில் பாக அளவிலும் செயல்படும். மேற்படி அணிகளுக்கு ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்களை நியமிக்கவேண்டும். பேரூராட்சி, வட்டங்களில் ஒரு அமைப்பாளர், இரண்டு துணைஅமைப்பாளர்கள் நியமிக்க வேண்டும்.
இந்த பொறுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட கழக அலுவலகமான தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.