தூத்துக்குடியில், சனிக்கிழமை தி.மு.க இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், சனிக்கிழமை தி.மு.க இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர், மாணவர் அணி சார்பில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தி திணிப்பு
இந்திய துணைக் கண்டத்தின் பண்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற கருத்தியலை பா.ஜனதா அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது. இதனால் மத்திய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது. மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இந்தியை பொது மொழியாக திணிப்பது சர்வாதிகாரம் ஆகும்.
ஆர்ப்பாட்டம்
எனவே அலுவல் மொழிச் சட்டத்தின் மூலமும், இந்திய அளவில் அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வுத் திட்டத்தின் மூலமுவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய பா.ஜனதா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவரணி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கீதாஜீவன், தமழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.