தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது.

Update: 2022-09-15 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிகழ் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிக்கூடங்களில் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து இருந்தது.

வினியோகம் தொடக்கம்

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 201 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 900 மாணவர்கள், 10 ஆயிரத்து 473 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 373 பேர் பிளஸ்- 2 தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 380 மாணவர்கள், 10 ஆயிரத்து 303 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 683 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், அரசு தேர்வுகள் இயக்கம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து பள்ளிகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்