தூத்துக்குடியில்,அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் விழா சனிக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடியில்,அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் விழா சனிக்கிழமை நடக்கிறது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-08 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானம் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 313 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம். பழைய அடையாள அட்டைகளையும் புதுப்பித்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் வேண்டுவோர் விண்ணப்ப மனு கொடுக்கலாம். மேலும்; மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெறுவதற்கு சிறப்பு நேர்காணலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விழாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்