தேனி மாவட்டத்தில் 166 மையங்களில் குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது
தேனி மாவட்டத்தில் 166 தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 166 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் 44 ஆயிரத்து 195 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 166 ஆய்வு அலுவலர்கள், 166 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2,206 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
மேலும் இந்த தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகா அளவிலும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைமுறைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்வதற்காக 171 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு அலுவலர் செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.